இராமநாதபுரம்: மத்திய அரசு சமூக நீதித்துறை பட்டியலின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்துவருகிறது.
அத்திட்டங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்திவருகிறது. 40 விழுக்காட்டிற்கும் மேல் பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்தை தேர்வு செய்து அந்தப் பகுதியில் உள்ள முக்கியத் தொழிலை 100 விழுக்காடு மத்திய அரசின் நிதியுதவியுடன் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் செய்து கொடுக்கிறது.
அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 95 விழுக்காடு பட்டியலின மக்கள் வசிக்கும் புதுக்குடி கிராமத்தை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தேர்வு செய்து மூன்று திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பெண்களுக்கான பாசி வளரப்பு, கடல் வண்ண மீன்கள வளர்ப்பு என இரண்டு திட்டமும், ஆண்களுக்கு கடலில் மிதவைக் கூண்டுகள் அமைத்து அதில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டமும் 100விழுக்காடு மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் பிராந்திய நிலைய முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார் பேசியபோது, "100 விழுக்காடு மத்திய அரசின் நிதியுதவியுடன் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், கடல் வண்ண மீன் வளர்ப்பு, பாசி வளர்ப்பு, சிங்கி இறால் வளர்ப்பு போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொருவரும் மாதம் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்.
தொண்டி புதுக்குடி கிராமத்தில் 10 குழுக்கள் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. 6 குழுக்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் மீன் தொட்டி, மோட்டார் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 5.2 லட்சம் மதிப்பீட்டில் கடலில் இரண்டு மிதவை கூண்டுகள் 5.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மீனவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சிங்கி இறால் வழங்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களில் அவை நன்கு வளர்ந்துவிடும். இதன் மூலம் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய்வரை மீனவர்கள் வருமானம் பெறமுடியும்" என்றார்.
சிங்கி இறால் வளர்ப்பு திட்டத்தில் பயிற்சி பெற்ற புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் முத்துமாணிக்கம், " நான் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை செய்துவருகிறேன். முன்புபோல் மீன்கள் அதிகளவில் இல்லை. வருவாயும் பெருமளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசு கடல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து மீனவர்களின் வளர்ச்சிக்காக எங்கள் கிராமத்தை தத்தெடுத்து மீனவப் பெண்களுக்கு வண்ண மீன் வளர்ப்பை கற்றுக்கொடுத்து அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்கான தொட்டிகள், மீன்களை கொடுத்துள்ளனர்.
அதில், கிடைக்கும் மகசூலை எடுத்துக்கொள்ள கூறியிருக்கின்றனர். மற்றொருபுறம் பாசி வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் கடலில் சிங்கி இறால் வளர்ப்பில் ஈடுபட ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர். இரண்டு மிதவைக் கூண்டில் 400 இறால் வீதம் விடப்பட்டுள்ளது. தினசரி 10 கிலோ மீன் உணவாக வழங்கப்படுகிறது.
அதற்கான தொகையை ஆராய்ச்சி நிலையம் எங்களுக்கு வழங்கும். சிங்கி இறால் அறுவடையில் ஈடுபடும்போது ஒவ்வொருவருக்கும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம்வரை கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார் மகிழ்ச்சியுடன்.
வண்ண மீன்வளர்ப்பில் ஈடுபடும் ஆனந்தி திட்டம் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது, " நாங்க முன்பு வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு இருந்தோம். கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் மூலமாக எங்களுக்கு வண்ண மீன் வளர்ப்பு தொடர்பாக 3 நாள் பயிற்சி கொடுத்தனர்.
அவர்களே தொட்டி, மீன்கள், மின்மோட்டாரை கொடுத்தனர். வண்ண மீன்களை 45 நாள்கள் வளர்த்து விற்பனை செய்தோம். அதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. வண்ண மீன் வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து இத்திட்டம் அருகேயுள்ள கண்கொள்ளான் பட்டிணத்தில் செயல்படுத்த கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. பட்டியலின மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம் மக்களுக்கு நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது என்பதை திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடம் பேசும்போது தெரிகிறது.
இதையும் படிங்க: சிப்பி அலங்காரம், கடல்பாசி வளர்ப்பு என அசத்தும் ராமநாதபுரம் பெண்மணி