ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த பகுதி நகராட்சி, ஊராட்சி மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தினமும் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சந்தைகளும் ராஜா பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு காலை 6 மணி முதல் 1 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்று பொதுமக்கள் கரோனா வைரசில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கிருமிநாசினி சுரங்கத்தை நகராட்சி மூலமாக, கரோனா தடுப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். அதேபோல் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் கிருமிநாசினி சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சந்தை, மருத்துவமனைக்கு வரும் மக்கள் இந்தப் பாதையின் வழியாகச் செல்லும் பொழுது கிருமிநாசினிகள் அவர்கள் மீது தெளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க முடியும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கிருமிநாசினி பாதை மார்க்கெட், அரசு தலைமை மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
காய்கறி சந்தைகள் காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே இயங்கும் அதனால் மக்கள் ஒரு மணிக்கு மேல் நடமாட்டம் தவிர்க்க வேண்டும். மக்கள் அநாவசியமாக தெருக்களில் சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டும்.
ராமநாதபுரத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,777. இதில் 1,789 பேர் தற்பொழுது வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ராமநாதபுரத்தில் மொத்தமாக 35 பேருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் இரண்டு பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற அனைவருக்கும் தொற்று இல்லை” எனக் கூறினார்.