ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வைரசைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் கைகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையங்கள், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை வீர ராகவ ராவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை அனைத்தும் எடுத்துவருகிறோம்.
கிராமம், ஊராட்சி, வட்டாரம், நகராட்சி ரீதியாக மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டு, மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்கப்பட்டுவருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை இங்கு வைரஸ் பாதிப்பு இல்லை.
சுய உதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயார் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, அதன்மூலம் தேவையான அளவில் முகக்கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு இல்லை. கரோனா வைரஸ் அச்சத்தைப் பயன்படுத்தி முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.