தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது, ”அனைத்து பெண்களும் தமிழ்நாடு அரசின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்” என்ற அறிவிப்பு. எவ்வித அடையாள அட்டையுமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தினசரி பேருந்துகளில் மணிக்கணக்கில் பயணித்து வேலைக்கு சென்றுவந்த பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பானது நேற்று (மே.08) முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் , ராமநாதபுரத்தில் மொத்தம் 105 பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு கட்டணம் இல்லை என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் பணிமனையிலிருந்து 48 பேருந்துகளும், பரமக்குடி பணிமனையிலிருந்து 31 பேருந்துகளும், முதுகுளத்தூர் பணிமனையில் 12 பேருந்துகளும், ராமேஸ்வரத்தில் 10 பேருந்துகளும், கமுதி பணிமனையில் 4 பேருந்துகள் என இவை அனைத்திலும் மகளிருக்கு கட்டணம் வசூலிக்கப்பமாட்டாது.
ராமநாதபுரத்தில், மொத்தம் ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு சரியான பிறகு கல்லூரி, பள்ளி, வேலை, வெளியிடங்களுக்கு செல்லும் மகளிருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மகளிர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் - அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து அலுவலர்