ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரையடுத்துள்ள உடையார்கூட்டம் கிராமத்தில் வசிக்கும் வடிவேலன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
வழக்கம்போல, நேற்று பள்ளி முடிந்துவிட்டு அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் அருகே சகமாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வடிவேலனின் சக மாணவர் ஒருவர் அங்கிருந்த புளியமரத்தில் துணியை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
இதனைக்கண்ட மற்ற மாணவர்கள் பயந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது, தூக்கில் தொங்கிய மாணவனைக் காப்பாற்றும் விதமாக, வடிவேலன் சமயோசிதமாக யோசித்து கழுத்தை துணி இறுக்காமலிருக்க, அந்த மாணவனின் வயிற்றைப் பிடித்து தூக்கி நிறுத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதன் பிறகு அருகிலிருந்தவர்கள் வந்து அச்சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பின்பு, தற்போது அந்தச் சிறுவன் நலமாகவுள்ளார்.
சமயோசிதமாக யோசித்து மாணவனின் உயிரைக்காப்பாற்றிய வடிவேலன் குறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரை நேரில் அழைத்துப் பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.
இதையும் படிங்க: ரூ. 1.74 லட்சம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பாராட்டு