நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், " ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 மீனவ கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்கு 63 இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
மேலும் சிறிய கட்டுமரங்களை கரையில் ஏற்றி பாதுகாப்பாக வைக்கவும், பெரிய படகுகளை போதிய இடைவெளி விட்டு நிறுத்தி வைக்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவர் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய 39 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளுக்கு என தனியாக திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களுக்கும் வருவாய் துறை அலுவலர்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள நிலவரங்களை கண்டறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: நெருங்கும் ’நிவர்’ புயல் - தற்போதைய நிலை என்ன?