இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 52 மீனவர்களையும், 7 விசைப்படகுகளையும் விடுதலை செய்யவேண்டும், பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை (ஜன. 11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல இந்தத் தொழிலில் நேரடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், சார்பு தொழிலாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உடனே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களையும் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!