ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து பாம்பன் சாலைப் பாலத்தின் இருபுறம் உள்ள நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ள மின்வயர்கள் மூலம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
பாம்பன் சாலைப் பாலத்தில் உள்ள மின் விளக்குகளுக்கான வயர் இணைப்புகளும் பதிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, பிராட்பேண்ட் இணையதள பைபர் வயர்களும், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயும் உள்ளன. இந்நிலையில் பாம்பன் சாலைப் பாலத்தின் வடக்கு நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த மின் விளக்குகளுக்கான வயர்களில், நேற்றிரவு (ஜூன் 4) மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக, பாலத்தில் நின்றிருந்த மீனவர்கள் மண்டபம் துணை மின் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ராமேஸ்வரம் தீவு முழுவதும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்கசிவை சரிசெய்தபிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இதனால் தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இன்று (ஜூன் 5) பிற்பகல் பாம்பன் பாலத்தில் மின்கசிவு சரி செய்யப்பட்டவுடன், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: ஈரோட்டில் 15.000 வாகனங்கள் பறிமுதல்!