ராமநாதபுரம்: அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் தார் பிளாண்ட் நிறுவனம் நடத்திவருகிறார். இவர் சசிகலாவிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதையடுத்து சில நாள்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பெட்ரோல் குண்டுவீச்சு
நேற்று தார் பிளாண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி, விடுமுறை என்பதால் அவர் நிறுவனத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கேயே உறங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு 2.45 மணி அளவில் மிகப்பெரிய சத்தம் கேட்டுள்ளது. உடனே வெளியில் வந்து பார்த்தபோது அடையாள தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
வின்சென்ட் ராஜாவின் சொகுசு கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமலை, காவல் ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குண்டு வீசியவர்களை தேடிவருகின்றனர்.
'ஆர்பி உதயகுமார்தான் காரணம்'
இது குறித்து வின்சென்ட் ராஜா கூறுகையில், "சசிகலாவிடம் போனில் தொடர்புகொண்டு பேசிய பின்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இச்சம்பவத்தை நடத்தி உள்ளனர்.
வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி இருவரும் எனது உறவினர்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் எனது நிறுவனத்தில் இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியாது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இவர்கள் இருவரும்தான் காரணம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் - அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி!