ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 62ஆவது குருபூஜை செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் தலைமையில் தென்மண்டல ஐஜி, 3டிஐஜி, 20 எஸ்பி மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காவலர்கள், ஊர்க் காவல் படை, ஆயுதப்படை உள்ளிட்ட 5 ஆயிரம் காவலர்கள் ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளி மாவட்டத்திலிருந்து வரும் வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பரமக்குடி பகுதியில் 100 அடிக்கு ஒரு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பரமக்குடி நகர் காவல்துறை நிலையத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆளில்லா பறக்கும் விமானத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ஜெயந்த் முரளி, "இமானுவேல் சேகரனின் 62 ஆவது குருபூஜையை முன்னிட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இமானுவேல் சேகரனின் 62ஆவது குருபூஜை அமைதியாக நடத்தி முடிக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.