ராமநாதபுரம்: பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 4 பேர் கொண்ட தென்னக பொறியாளர் குழு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் தூக்கு பாலம் முக்கிய பங்கு வகித்துவருகின்றது. 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி 250 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் பாதுகாப்பு காரணமாக சென்சார்கள் பொருத்தப்பட்டு அதன் உறுதி தன்மையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
காரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் தளர்வுகளின் அடிப்படையில், முக்கியமாக பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுவருகின்றன. அக்டோபர் 2ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை செல்லும் சேது விரைவு ரயில் 6 மாத காலத்திற்கு பின் தனது பயணத்தை தொடங்கியது.
நேற்று (அக்டோபர் 3) பாலத்தின் உள்ள சென்சார் கோளாறு ஏற்பட, பயணிகள் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை முதல் தென்னக ரயில்வே பாலங்களின் துணை தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான 4 பேர் கொண்ட பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது ரயில் எஞ்சின் கொண்டு சென்சார்கள் பரிசோதனை செய்யப்படுகின்றது. நாளை (அக்டோபர் 5) வரை பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, பகுப்பாய்வு செய்து அதனடிப்படையில் ரயில் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுவரை சென்னை செல்லும் ரயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.