ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 ஆக்சிஜன் படுக்கை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து, மருத்துவமனையில் பணியாற்றும் அலுவலர்களைக் கேட்ட பொழுது, 'படுக்கை குறைந்த அளவில் இருப்பதாக' கூறினர். கரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் தேவையுடன் சென்ற நோயாளிகள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைக்காக காக்க வைக்கப்பட்டனர்.
இது பற்றி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,"ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாகுறை ஏதும் இல்லை. கரோனா தொற்று பாதிக்கும் நோயாளிகளை அனுமதிக்க தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் போதிய அளவில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை, பரமக்குடி மருத்துவமனையில் உள்ளன.
ஆக்சிஜன் படுக்கை தேவையுடன் வருபவர்களுக்கு முன்கூட்டி வழங்க தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனியாருடன் இணைந்து பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் இல்லை என்று கூறுவது தவறான தகவல்’’ என்று கூறினார்.