வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம், ‘நிவர்’ புயலாக தீவிரமடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவம்பர் 25) இரவு கரையைக் கடக்கக்கூடும்.
இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலினால் பலத்த காற்று மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், எப்போதும் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி வானிலை எச்சரிக்கைக்கு மாறாக நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல், அலைகள் ஏதுமின்றி அமைதியாக குளம் போல் காணப்பட்டது.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள், நாட்டுப் படகுகளை பாக்ஜலசந்தி கடற்பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு மாற்றினர்.
இதையும் படிங்க:நிவர் புயல் எதிரொலி: இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான தர்கா!