ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் அழைக்கப்பட்டு இருந்தார்.
கூட்டத்தில் பேசிய நவாஸ் கனி, "சிறுபான்மையினரை நசுக்கும் வேலையை மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக முத்தலாக் தடை, என்ஐக்கு சிறப்பு அதிகாரம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினார்.
பின் ஈடிவி பாரத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பிரத்யேக பேட்டியில், " வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் நிவாரணப்பொருட்களை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமிக்கு, நீலகிரியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கக்கூட நேரம் இல்லை. ஆனால் அந்த மக்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினை விளம்பரத்திற்காக சென்றதாக கொச்சைப்படுத்தினார்" என்று காட்டமாக விமர்சித்தார்.
வேலூரில் திமுக, அதிமுக வாக்கு வித்தியாசம் குறைந்த அளவே இருந்தது என்ற கேள்விக்கு, "வேலூரில் அதிமுக 60 வாக்காளர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வைத்து காவல்துறையினர் உதவியோடு பணப்பட்டுவாடா செய்தது, அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றும், மேலும் அவர் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் மறைமுக பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி திமுக வேலூரில் சிறப்பான வெற்றியைப் பெற்றது" என பெருமிதம் தெரிவித்தார்.