இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்காக அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாமில் உள்ள பழைய, புதிய குடியிருப்புகளில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பிரதான நுழைவு வாயிலில் அகதிகள் மறுவாழ்வு துறை ஊழியர்கள் பகல், இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முகாமை விட்டு வெளியே வந்து திரும்பும் அங்குள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இதையடுத்து நுழைவு வாயிலில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா, அலுவலகத்தில் இருந்த கணினி ஆகியவை சமீபத்தில் திருடு போனது. இதுகுறித்து, அன்றைய தினம் பணியில் இருந்த இரவு காவலர் இருவர் உள்பட 5 பேரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
திருடு போன பொருட்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என காவலர்கள் தெரிவித்த நிலையில், காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, பணியின் போது கவனக்குறைவாக இருந்த இரவு காவலர்களை துணை ஆட்சியர் முருகேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.