இந்தியா முழுவதிலும் கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ரயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது முக்கியமான ரயில் நிலையங்களுக்கு மட்டும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால் கடந்த 11 மாத காலத்திற்கு மேலாக ராமேஸ்வரம்-மதுரை இடையேயான பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, புவனேஸ்வர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு எடுத்துச்செல்லப்படும் மீன்கள், கருவாடுகள் போன்ற உணவுப் பொருள்களும் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்று வேலை பார்ப்போர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்வோர் என அனைவரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பெரும் பணத்தை பயணத்திற்கு செலவு செய்யும் விதமாக பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், வருகின்ற மார்ச் மாதம் முதல் ராமேஸ்வரம் - மதுரை இடையேயான பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா