ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பழனிபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில்," கடலாடி தாலுகா, ஓரிவயல் பகுதியில் உள்ள கண்மாய் மூலம் 340 ஆயக்கட்டுதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த கண்மாயின் குடிமராமத்து பணிகள் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அரசாணைப்படி அந்தந்த பகுதியில் உள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அல்லது ஆயக்கட்டுதாரர்கள் சங்கம் சார்பிலேயே குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவர்களின் கருத்தும் கேட்கப்பட வேண்டும்.
ஆனால் ஓரிவயல் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் சங்கத்திடம் எவ்விதமான கருத்தையும் கேட்காமல் கருப்பசாமி என்பவருக்கு குடிமராமத்து பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது குடிமராமத்து செய்வதற்கான பணிகளை அவசர அவசரமாக தொடங்கியுள்ளார்.
கண்மாயில் பாதியளவு தண்ணீர் இருக்கும் நிலையில் குடிமராமத்து பணியை தொடங்கியுள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஓரிவயல் கண்மாயின் குடி மராமத்து பணிகளை கருப்புசாமி மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிப்பதோடு, அரசாணை அடிப்படையில் முறையாக குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயல் அலுவலர் ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.