ராமநாதபுரம்: ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் இன்று சமூக பாதுகாப்புத் துறை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாநில பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீதியரசர் ஜெனித்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெண் குழந்தைகள் விடுதிகளில் தங்கியுள்ள பெண்பிள்ளைகளுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களையும் பரிசையும் வழங்கினார்.
அதற்கு முன்பாக விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், “வாழ்வில் குறிக்கோளை பெண் பிள்ளைகள் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும். கனவு மட்டுமே கண்டுக் கொண்டிருக்க கூடாது, அதற்கு தொடர்ந்து பயணம் செய்து வெற்றியடைய வேண்டும். அதற்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இனியும் கோயில்களுக்கு யானைகள் தேவையா?