இராமநாதபுரம்: சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஒட்டுமொத்த அஇஅதிமுகவும் சசிகலா தலைமையின் கீழ் செல்லும் கார்த்திக் சிதம்பரம் பேசினார்.
பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து ஓட்டப்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “குருமூர்த்தி நடத்திய ஆண்டுவிழாவில் ஒரு அரசியல் கட்சி பிரமுகரை சாக்கடை தண்ணீர் என வர்ணனை செய்துள்ளார். அதன்பின் தற்போது நீதிபதிகளை விமர்சனம் செய்துள்ளார். அவரின் விமர்சனங்களை கண்டிக்கவேண்டும்.
கோவிட் தடுப்பூசி விவகாரம்
ஒரு வக்கிர மனநிலையில் இருப்பவர் தான் இதுபோன்று பேசுவார்கள். எவரொருவர் அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கிறார்களோ, அவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான துறை மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். இதில் நேரடியாக அனைத்து பாதிப்பையும் சந்தித்தவன் நான். மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி பயப்படாது.
உலகமெங்கும் கொரோனா தடுப்பூசி போடும்போது அந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மன்னர் முதலில் தடுப்பூசியை போட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றனர். இந்தியாவில் தான் அது மாதிரி எதுவும் செய்யவில்லை. அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் தடுப்பூசி போட்டுள்ளார். துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.
மீண்டும் வருகிறார் ராகுல்காந்தி
ஸ்வீடன் நாட்டு மன்னர் தடுப்பு ஊசி போட்டுள்ளார். பொறுப்பிலுள்ள யாரும் தடுப்பூசி போடவில்லை, பொதுமக்களை தான் போடுமாறு கூறுகின்றனர். இந்தியாவில் முதல் தடுப்பூசியை குடியரசுத் தலைவருக்கும், இரண்டாவது தடுப்பூசியை பிரதமருக்கும் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பொது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும்.
பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் தடுப்பூசி போடாமல் மருத்துவர்களை மட்டும் போடுமாறு கூறுவதால் தான் பொது மக்களுக்கு நம்பிக்கையில்லை. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த ராகுல்காந்தி தமிழர்களின் கலாசாரத்தை பற்றி பேசினார். ஒரு வாரம் அல்லது பத்து நாள்களில் மீண்டும் ராகுல் காந்தி தமிழ்நாடு வரவரவுள்ளார்.
சசிகலா- கமல்ஹாசன்
தேர்தல் பரப்புரை செய்யும் போது அடிக்கடி ராகுல்காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெற உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மட்டும் தான் போட்டி. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தலைமையின் கீழ் செல்லும்.
தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்பு சசிகலா தலைமையின் கீழ் அதிமுக செல்லும். ஆனால் விரைவில் ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தலைமையின்கீழ் செல்லும். மக்கள் நீதி மையம் கட்சிக்கு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்காது. கமல்ஹாசன் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். தனியாக பயணம் செய்ய நினைத்தால் அவர் கடந்த தேர்தலை போல் சொற்ப வாக்குகள் தான் வாங்குவார்” என்றார்.
இதையும் படிங்க: 'இன்னும் மூன்று மாதத்தில் முதலமைச்சர் ஆவார் மு க ஸ்டாலின்'- பலிக்குமா கார்த்தி ப சிதம்பரம் ஆரூடம்!