287 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தூரத்திலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இங்கு, ஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில், இருநாடுகளில் இருந்தும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சிலுவைப்பாடு, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள். ஆனால், தற்போது இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு திருவிழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடைபெறும் எனவும், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவின்போது, இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஆனால், இலங்கை நெடுந்தீவில் உள்ள நெடுந்தீவு தேவாலய பங்குக்கு உள்பட்ட 150 நபர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என இலங்கை அரசால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ்நாடு மீனவர்களுக்கும், பக்தர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து – ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்