ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியை ஆதரித்து தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கொடுமலூர், பெருமாள் குடும்பன் பட்டி, நெருஞ்சி பட்டி, செங்கோட்டைபட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிமுகவுகக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடம் 100 நாள் வேலைக்கு போய் தூங்கி விட்டு வந்து விட்டீர்களா எனக் கேட்டார்.
தொடர்ந்து பரப்புரையில் பேசிய அவர், "பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் என மாநில அரசு, மத்திய அரசு அறிவித்து உள்ளது. திமுக அதை எதிர்த்து உள்ளது. ஆகவே திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் விரட்டி அடிங்கள். தேவேந்திர குல வேளாளர்களின் சின்னம் இரட்டை இலை. காவல்துறையினர் சின்னம் இரட்டை இலை" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "40 ஆண்டு காலமாக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க மத்திய- மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதை சட்டமாக இயற்றிய போதும் திமுக வெளிநடப்பு செய்தது. தேவேந்திரகுல வேளாளர் அறிவித்ததற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒரு நன்றி அறிவிப்பு கூட சொல்லவில்லை. ஆகவே இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்" என கூறினார்.