ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிகட்டு உள்ளது. இது மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் என்ற பல பெயர்களில் நடத்தப்படுகிறது. கலாச்சார அடையாளமாகவும் உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதனைக் காண வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
ஆனால், நேரடியாக வருவோருக்கு போதுமான இட வசதிகள் இல்லை. இதேபோல் முறையான கேலரி வசதியும் இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் நிலை உள்ளது. இதனால், அவர்களால் முழுமையாக கண்டு ரசிக்கமுடியவில்லை. மரத்தின் மீதும், வீட்டின் மாடிகளில் நின்றும் ஜல்லிக்கட்டை காணும் நிலை உள்ளது.
இதனால், லட்சக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர மைதானமும், கேலரியும் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு, மனுதாரர் மீண்டும் நான்கு வாரத்திற்குள் ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அதனை ஆட்சியர் ஆறு வாரத்திற்குள் அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை ஆர்வமுடன் அடக்கும் இளைஞர்கள்!