ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த குப்புராமு களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகிறார். அவரிடம் ஈடிவி பாரத் சார்பாக பிரத்யேகமாகச் சில கேள்விகளை முன்வைத்தோம்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவிற்கு எந்த அளவிற்குச் சாதகமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்கள் கீழ்த்தட்டு மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன. மேலும், பெண்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டம் மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. அவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதேபோல, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பான தேசம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.
இதில், மீனவர்கள், உழவர்கள் மத்தியிலும் எங்களுக்குப் பெருமளவு ஆதரவு உள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணி ராமநாதபுரம் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். அதிமுக தொண்டர்கள் உங்களுக்கு எந்த அளவிற்குத் தேர்தல் பணியில் ஆதரவு தருகிறார்கள்.
உங்களுக்கு அதிமுகவினர் வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
நிச்சயமாக, அவர்கள் அதிக அளவிலான வாக்கில் பாஜக இந்தத் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்று உழைத்துவருகின்றனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்று அதிமுகவின் தலைவர்களும் தொண்டர்களும் உழைத்துவருகின்றனர்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்?
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.
இதையும் படிங்க: மழை நீர் சேகரிப்பு பரப்புரையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி