இலங்கையிலிருந்து கள்ளப்படகில் தமிழ்நாடு கடல் பகுதியாக ஊடுருவி கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கள்ளத்தனமாகச் செல்வதற்காக கர்நாடக மாநிலம், மங்களூருவில் பதுங்கியிருந்த 38 இலங்கைக்காரர்களை மங்களூரு காவல் துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைதுசெய்தனர்.
மங்களூருவில் கைதான 38 நபர்களில் 14 பேர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரைப் பகுதியில் ஊடுருவி மங்களூரு சென்றுள்ளனர்.
இந்நிலையில் 14 நபர்களையும் கள்ளப்படகில் அழைத்துவரவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் முகைதீன் (43), ரசூல் (29), சதாம் (31) ஆகிய மூவரை சென்னை கியூ பிரிவு காவலர்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கைது செய்தனர்.
தனிப்படை காவலர்கள்
இந்நிலையில் இலங்கையிலிருந்து கள்ளப்படகில் மண்டபம் பகுதிக்கு வந்த 14 நபர்களில் நான்கு நபர்களைக் காவல் ஆய்வாளர் லோகேஷ் தலைமையிலான எட்டு பேர் கொண்ட மங்களூரு தனிப்படை காவலர்கள் நேற்று (ஜுன் 20) மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
மங்களூரு தனிப்படை காவலர்கள் நான்கு நபர்களையும் அவர்கள் வந்திறங்கிய வேதாளை கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், இலங்கைக்காரர்கள் மரைக்காயர்பட்டினத்தில் தங்கியிருக்க அடைக்கலம் கொடுத்த இம்ரான்கான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் மங்களூரு காவல் துறையினர் விசாரணை செய்தனர்.