இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை, அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பங்கேற்று, உதவித்தொகை, நிவாரணப் பொருள்களை 198 நபர்களுக்கு வழங்கினார்.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்…
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாட்டில் ஊதியமின்றி பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள், ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று குறைந்து பாதிப்பு ஏற்படாத நிலைக்கு வந்ததும், கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டவர்களால் அபகரிக்கப்பட்ட 10 ஏக்கர் கோயில் நிலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, யார் தவறு செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. அதிக வருமானம் தரும் தனியார் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.