ராமநாதபுரம்: திருவாடானை வட்டம் தொண்டி காந்தி தெருவில் வசித்துவருபவர் செல்லக்கனி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு கைக்குழந்தையும் உள்ளன. கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் செல்லக்கனிக்கும் கவிதாவிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கவிதா, குழந்தைகளை வீட்டினுள்ளே வைத்து பூட்டிவிட்டு செல்லக்கனி வெளியே சென்றுவிட்டார்.
மறுநாள் கணவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கவிதா தனது குழந்தைகளுடன் வீட்டினுள் இருந்துள்ளார். ஆனால், நான்கு நாள்களாகியும் செல்லக்கனி வீட்டிற்கு வரவில்லை. இதனால், அச்சமடைந்த கவிதா அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.
தனது செல்போனில் பணம் இல்லாததால் யாரையும் அழைத்து உதவி கேட்க முடியவில்லை. இதனால், வீட்டினுள் தவித்துவந்த கவிதா, சமயோஜிதமாகச் சிந்தித்து தனது போனில் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.
வீட்டினுள் சிக்கியவர்கள் மீட்பு
இதையடுத்து, உடனடியாக திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கும், தொண்டி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கவிதாவையும், குழந்தைகளையும் மீட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி காவல் துறையினர், கவிதாவிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், மனைவி குழந்தைகளை வீட்டினுள் வைத்து பூட்டிய கணவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நீ வேணா சண்டைக்கு வா... போதையில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட காவலர்