தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பாலமுருகன்(31). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் இல்ல விழாவை முடித்துவிட்டு மாலை காரில் தனது மனைவி தனலெட்சுமி(25), 8 மாத ஆண் குழந்தை அபிநவ் தர்ஷன், இருளாயி 50, மாரிமுத்து மகன் அழகுபாண்டி ஆகியோருடன் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.
அப்போது கமுதி-சாயல்குடி சாலையில் பிள்ளையார்குளம்-திட்டங்குளம் இடையே திடீரென டயர் வெடித்து, கார் நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கமுதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தனலெட்சுமி இறந்தார். இவர்களின் 8 மாத குழந்தை மற்றும் இருளாயி, அழகுபாண்டி ஆகியோர் காயங்களுடன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.