இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இன்று (டிச.10) பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1970 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மட்டும் 3 விவசாயிகள் திமுக அரசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 12 விவசாயிகள் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வராமல் மலர்களா வரும் என அப்போது போராடிய விவசாயிகளுக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி பேசினார். இந்த திமுக, இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக பேசுகிறதா? இது குறித்து என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா ?
ஒரு கோடி பேர் போராடுவதாக திமுக கூறுகிறது. எந்த விவசாயியும் டெல்லியில் போராடவில்லை. ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என தெரியாத திமுகவுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி மட்டும் தெரியும். சென்னை மாநகராட்சியில் சுத்திகரிப்பு ஊழியர்களின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் தான் திமுக கூட்டம்.
பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் திமுக வழங்கியுள்ளது. இந்த ரூபாய் எங்கிருந்து வந்தது? ரயிலில் டிக்கெட் எடுக்காமல் கருணாநிதி பயணித்தபோது சேர்த்து வைத்திருந்த பணமா அல்லது அவர்களின் முன்னோர்களின் பணமா ?
ஊழல் முறைக்கேடு வழக்குகளில் திமுகவைச் சேர்ந்த எவரும் தண்டனை பெறவில்லை என ஆ.ராசா சொல்கிறார். கொஞ்சம் பொறுங்கள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு எல்லாம் தெரியும். ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் அதுக்குள்ள இருப்பது ஈறும் பேனும் என்ற சொலவடைக்கேற்ப ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு திமுகவின் நிலை தெரிய வரும்.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பிரதமர் மோடியின் படத்தை மீண்டும் டிசம்பர் 15 ஆம் தேதியன்று நானே திறந்துவைப்பேன்” என்றார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார்:எல்.கே.சுதீஷ்