ராமநாதபுரம்: பரமக்குடி அருகே அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (41). இவர்களுக்கு சதீஷ், ஹரி என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக பாக்கியலட்சுமி வயிற்றில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு நடைபெறவிருந்த அறுவை சிகிச்சைக்கு முன்னர், பாக்கியலட்சுமிக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊசி போட்ட சில நொடிகளிலேயே பாக்கியலட்சுமி வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்தார்.
இதனையடுத்து அவர் அருகில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பாக்கியலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை அறிந்த பாக்கியலட்சுமியின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததே இறப்புக்கு காரணம் எனக் கூறி நேற்று (ஜூலை 2) அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனர்.
தகவலறிந்த பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்தப் புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த பரமக்குடி நகர் காவல் நிலையத்தினர், தனியார் மருத்துவமனையினரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீ குளித்து தற்கொலை