நாடு முழுவதும் வருகிற 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரித்து, பொது இடங்களில் மூன்று நாள்கள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாகவோ எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட்19) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அலுவலர்கள், இந்து முன்னணி, பாஜக மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, கரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை அனைவரும் தங்கள் வீட்டிலேயே சிலையை வைத்துக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், 'இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அரசின் முறையான வழிகாட்டுதலுடன் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து பூஜை, வழிபாடு நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட இருக்கிறோம்.
நாங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாகக் கொண்டாடத் தயாராக இருக்கிறோம். அதேபோல் அரசும், காவல்துறையும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட விட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: விநாயகர் சிலை அகற்றம்: இந்து அமைப்பினர் எதிர்ப்பு!