ராமநாதபுரம் உச்சிப்புளி அரசு மேல்நிலைபள்ளியில் கார்த்தீஸ்வரன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது பள்ளியில் உள்ள மின் மோட்டாரை ஆன் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இவர் மின்மோட்டார் ஆன் செய்ய அருகில் உள்ள இரும்பு குழாயை எடுத்துள்ளார். அப்போது கார்த்தீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக மாணவரை உச்சிப்புளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த மருத்துவர் ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே மாணவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். பின் உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த பெற்றோர்களும்,கிராம மக்களும் பள்ளியில் குவிந்து,ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, அங்கு ராமேஸ்வரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும்,சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நேரில் ஆய்வு செய்தார். அப்போது கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவர் கார்த்தீஸ்வரன் தந்தை ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உச்சிப்புளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.