ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் கடலூரில் நேற்று முன்தினம் புதிதாக படகை வாங்கிக் கடல் மார்க்கமாக ராமேஸ்வரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அதிகாலை மல்லிப்பட்டினத்திலிருந்து 15 கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் சூறைக் காற்று ஏற்பட்டதால் படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதையடுத்து படகிலிருந்த 10 மீனவர்கள் கடலில் குதித்து நீந்தத் தொடங்கியுள்ளனர்.
இதில் செந்தில்வேல், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்கள் மட்டும் நீந்தி மல்லிப்பட்டினம் கரைவந்து சேர்ந்து விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த இரண்டு மீனவர்களும் சிகிச்சைக்காக மல்லிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள எட்டு மீனவர்களான முனியசாமி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரக்குடியான் முனீஸ்வரன் உமாகாந்த் ஆகிய மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த மீனவ கிராம மக்கள் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தற்போது நடுக்கடலில் மாயமான எட்டு மீனவர்களில் முனிஸ்வரன், தரகூடியான், ரஞ்சித்குமார், முனியசாமி ஆகிய நான்கு பேர் மட்டும் 24 மணி நேரத்திற்கு பிறகு மல்லிபட்டினம் அருகே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மேலும் கடலில் சிக்கியுள்ள நான்கு மீனவர்களும் உயிருடன் இருப்பதாக மீட்கப்பட்ட சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணி குறித்து கடற்படையினரிடம் கேட்டபோது, உச்சிப்புளியிலிருந்து மூன்று ஹெலிகாப்டர்கள், டேனியல் என்ற விமானம், ராமேஸ்வரத்திலிருந்து ஒரு கப்பல், மல்லிப்பட்டினத்திலிருந்து இந்திய கடற்படை கப்பல், ஓவர் கிராப்ட் உள்ளிட்டவை மூலம் மீதமுள்ள மீனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.