இலங்கை கடல் பகுதிக்கும் கன்னியாகுமரி கடல் பகுதிக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் தொடர் கனமழை பெய்துள்ளது.
அங்கு மொத்தமாக 971.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 126.20 மி.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 106.40 மி.மீ., பாம்பனில் 100.6 மி.மீ., மண்டபம் பகுதியில் 75 மி.மீ., ராமநாதபுரத்தில் 86.50 மி.மீ., குறைந்தபட்சமாக கமுதியில் 18 மி.மீ. என பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தை மாத அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் இறுதி நேரத்தில் கனமழையில் மூழ்கியிருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் உரிய கள ஆய்வு நடத்தி இழப்பீட்டு தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 6 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்