தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாகவே ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்துவருகிறது.
இன்று காலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் நகர், அதனைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பள்ளி, பணிக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 375.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக திருவாடானையில் 122.20 மி.மீ. மழையும், தொண்டியில் 107 மி.மீ. மழையும், பரமக்குடியில் 61 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய், உள்ளிட்ட நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கோயில்களில் இன்று முதல் அன்னதானம்'