இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அபாய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கிய கனமழை காலை வரை நீடித்தது தற்போது வரை இடி மின்னலுடன் மழை பெய்துவரும் காரணத்தால் அநேக பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் மக்கள் இரவில் தூக்கமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 35.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பரமக்குடி பகுதியில் 6.4 செ.மீ, ராமநாதபுரத்தில் 4.7 செ.மீ, பல்லமோர்குளம் பகுதியில் 4.2 செ.மீ, கமுதியில் 4 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும்,நாளையும் கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
நீண்ட காலமாக பயிரை விதைத்து மழையை எதிர்பார்த்து காத்திருந்து விவசாயிகள் இந்த கன மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.