வங்கக் கடல் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. இது வரும் நாள்களில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக மாறி இலங்கை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் தென் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலமாக கன மழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. ராமநாதபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.