ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், “என் மகன் மெசியா (28). கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி எனது மகனின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக ஜனவரி 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. அந்தக் காசோலையை ராமநாதபுரம் எஸ்.பி.ஐ. வங்கியில் செலுத்தினேன். பெயரில் குழப்பம் உள்ளதாகக் கூறி வங்கி நிர்வாகத்தினர் காசோலைக்குப் பணம் தர மறுத்துவிட்டனர். எனவே, இழப்பீடாக வழங்கப்பட்ட காசோலையை ஏற்றுக்கொண்டு உரிய பணத்தை வழங்க வேண்டும்.
இழப்பீட்டுடன் சேர்த்து என் மகள் சந்தியா ஆஸ்டினுக்கு உரிய அரசு வேலை வழங்குமாறு மீன்வளத் துறைச் செயலர், ராமநாதபுரம் ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று (பிப். 2) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வீ. பார்த்திபன், "மனுதாரர் நாளை (பிப். 3) வங்கிக்குச் சென்று தனக்குரிய ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த ஆவணங்களை ஆய்வுசெய்து வங்கித் தரப்பில் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும்" எனக் கூறி விசாரணையை இன்று (பிப். 3) தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மதுரை அருகே கோர விபத்து; முன்னாள் கவுன்சிலர் உள்பட இருவர் உயிரிழப்பு