மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர், காயத்ரி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என் கணவர் முத்துராமலிங்கம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே 18 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறோம்.
என் கணவர் மீது முதுகுளத்தூர் காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று, அந்த வழக்கின் விசாரணைகளுக்கு எனது கணவர் முறையாக ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். இருப்பினும், என் கணவரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக என் கணவர் உள்துறை முதன்மைச் செயலாளர், டிஜிபி மற்றும் ராமநாதபுரம் ஆட்சியருக்கு மனு அனுப்பினார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலாடி காவல் ஆய்வாளர் ஜான்சிராணி என் வீட்டிற்கு வந்து கணவரை இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி, எனது கணவரின் காலை உடைத்தார்.
மேலும், அவரை கடலாடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை பொய் வழக்கில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கடலாடி காவல் ஆய்வாளர் ஜான்சிராணி மீது நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட என் கணவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு இன்று (செப்.29) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் கணவர் காவல் நிலையததில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு அரசு தரப்பில் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ஐந்து லட்சத்தை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடமிருந்து அரசு பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? - ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் கேள்வி!