ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முதுகுளத்தூர் தாலுகாவில் கடந்த 10 வருடங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் அனைவரும் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. அதனால் முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. இதையடுத்து மக்கள் நெல் சாகுபடி செய்தனர். இதில் விளைந்த நெற்பயிற்களை விற்க நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், இடைத்தரகர்கள் மூலம் நெல் விற்று வருகின்றனர். இதன் காரணமாக இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு முதுகுளத்தூர், எம். தூரி மற்றும் செல்வநாயகபுரம் விளக்கு ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே முதுகுளத்தூர் தாலுகாவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது முதுகுளத்தூர், எம். தூரி மற்றும் செல்வநாயகபுரம் விளக்கு ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.