ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி. இவர், தமிழ்நாடு அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பத்தை முதுகுளத்தூர் ஊராட்சி முதல் நிலை உதவியாளர் மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது, மாரிமுத்து ராஜலெட்சுமியிடம் ரூ. 300 லஞ்சம் பெற முயன்றுள்ளார்.
மேலும், 300 ரூபாய் தரவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க முடியாது என்றும் அப்பெண்ணிடம் கூறியாதகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது, சகோதரர் உதவியுடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று மாரிமுத்துவை சந்தித்து 300 ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ராஜலெட்சுமி, மாரிமுத்துவிடம் 300 ரூபாய் பணம் கொடுத்ததை அவரது சகோதரர் மறைமுகமாக வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியதையடுத்து, லஞ்சம் வாங்கிய மாரிமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.