மாவட்ட தொழில் மையம் மற்றும் சென்னை பாபா அணு ஆராய்ச்சி மையம் சார்பாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தொழில் முனைவோருக்கான செயல் முறை விளக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். ஆட்சியர் வீர ராகவ ராவ் விழாவில் பேசுகையில், ”படித்த வேலையற்ற இளைஞர்கள் செய்தொழில் தொடங்க, அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று திட்டங்களிலும் கடந்த ஓராண்டில் 381 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.2.46 கோடி மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சிறு, குறு வியாபாரிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் ரூ.350 கோடி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக ராமநாதபுரம் இருப்பதால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்துவருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் கடனுதவித் திட்டம் மூலம் புதிய தொழில் தொடங்க பயனடையலாம்” என்றார்.
மேலும் 10 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க அரசு மானிய ஆணையை மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்
இக்கருத்தரங்கில் இளைஞர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய உலர்ப்பான்,மண் பரிசோதனை உபகரணம், நீர் சுத்திகரிப்பு ஜவ்வு போன்ற தயாரிப்பதற்கான செயல்முறை விளக்கம் குறித்து சென்னை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: 5 மணிநேரத்தில் பறந்த ஆம்புலன்ஸ் - காப்பாற்றப்பட்ட சிறுவன்!