ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளப்பட்டி, நரிப்பையூர், சாயல்குடி, உறைக்கிணறு போன்ற கிராமங்களில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடுபோவது தொடர்கதையாகி வருகிறது.
இச்சூழலில் கடலாடி அருகேயுள்ள நரிப்பையூர் - வெள்ளப்பட்டி கிராமத்தில் ஜெயபால், லட்சுமி ஆகியோருக்குச் சொந்தமான ஒன்பது ஆடுகளை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்துவது கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியுள்ளது. இக்கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பதை விவசாயிகள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக கிராம மக்கள் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் அதிக அளவில் வளர்க்கின்றனர். தற்போது ஆடுகள் மேய்ச்சல் முடித்ததும், இரவில் ஆட்டுப்பட்டியில் (கொட்டகையில்) அடைக்கும் ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் கார்கள் மூலம் கடத்துவது கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகி கால்நடை விவசாயிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு சாயல்குடி காவல் துறையினர் கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.