பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 4ஆம் தேதி பைபர் படகு மூலம் அந்தோணி, வினோத் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக சக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். வழக்கமாகக் காலையில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மறுநாள் காலை திரும்புவது வழக்கம். ஆனால் இரண்டு நாட்களாகியும் மீனவர்கள், இதுவரை கரைக்குத் திரும்பவில்லை.
மீனவர்களின் நிலைமை குறித்துத் தெரியாமல், பாம்பனில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தியக் கடலோர காவல் படையோ, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழு காவலர்களோ, மீன்வளத்துறை அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும், இதுவரை மீட்புப் பணிகளில் அரசு இவர்களை ஈடுபடுத்தவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.