கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பதில் மாங்குரோவ் சதுப்புநிலக் காடுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் ஒரு கோடியே 30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த மாங்குரோவ் காடுகள் அடர்ந்துவிரிந்து இருக்கின்றன.
இந்தியாவில் 4,985 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், தமிழ்நாட்டில் 45 கிலோ மீட்டர் பரப்பளவிலும் இந்தச் சதுப்புநிலக் காடுகள் உள்ளன. தமிழ்நாட்டில், முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் இந்த மாங்குரோவ் சதுப்புநிலக் காடுகள் அதிகம் காணப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் முதல் எஸ்.பி. பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகளில் 550 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படும் இக்காடுகள் இயற்கைப் பேரிடர்களின்போது மீனவ கிராமங்களைக் காப்பாற்றுகிறது.
2004 சுனாமியின்போது பிச்சாவரம் காடுகள் பெரும் சேதத்திலிருந்து அப்பகுதி மக்களைக் காத்தது. மேலும், இவை படகுகள் சேதமாவதைத் தடுக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்க உதவும் இக்காடுகள், மீன், இறால், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது.
கடலையொட்டியுள்ள பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகள் உப்பின் தன்மையை வெகுவாகக் குறைப்பதோடு, அக்காடுகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு நன்னீர் கிடைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ராமநாதபுரத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும்விதமாக ராமநாதபுரம் வனத் துறையின் சார்பாக 100 ஏக்கர் பரப்பளவில் உப்பூநீரை அடுத்த கடலூர், காந்தி நகரம், காரங்காடு ஆகிய பகுதிகளில் புதிதாக மீன் முள் வடிவில் நீர் செய்ய வாய்க்கால் அமைத்து அதில் மாங்க்ரோவ் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
மன்னார் வளைகுடா பகுதியான முயல், மனோலி தீவுகளிலிருந்து எடுத்துவரப்பட்ட அவிசீனியா மெரைனா எனும் வகையைச் சேர்ந்த விதைகள் 65 விழுக்காடும், ரைசோபோரா வகையைச் சேர்ந்த விதைகள் 35 விழுக்காடும் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் இவை விதைக்கப்பட்ட நிலையில் தற்போது அவை ஒரு அடிவரை வளர்ந்துள்ளன.
"மெதுவாக வளரும் இவை, 7 முதல் 10 ஆண்டுகளில் பெரும்காடாக மாறிவிடும். வெளிநாட்டுப் பறவைகளையும் இவ்வகையான காடுகளுக்கு அதிகம் வரும். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட மாங்குரோவ் சதுப்புநிலக் காடுகள் தற்போது காரங்காடு சூழலியல் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்றே கடலூர் உள்ளிட்ட பகுதிகள் மாறும்" என வன அலுவலர் சதீஷ் கூறுகிறார்.
விதைத்த விதைகளில் 95 விழுக்காடு செடியாக வளரத்தொடங்கியுள்ளதாக கூறிய அவர், அடுத்த பத்தாண்டுகளில் இக்காடுகள் ராமநாதபுரத்தின் பசுமையை அதிகப்படுத்தும் என்றார்.
"30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் வைக்கப்பட்ட சதுப்புநிலக் காடுகளால், எங்கள் பகுதி சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. பிச்சாவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்காடுகளால் மீனவர்களுக்கு கணவாய், இறால், மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன" என்று காரங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மேரி கூறுகிறார்.
படகுகளை இயற்கைப் பேரிடரின்போது பாதிக்காமல் பாதுகாக்கும், இக்காடுகளால் எதிர்காலத்தில் தங்கள் வருமானம் அதிகரிக்கும் என்று மகிழ்ச்சியாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மீனவர்கள்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு புத்துயிர் அளித்துள்ள பண்ணைக்குட்டைத் திட்டம்!