ராமநாதபுரம்: இந்திய கடல் பகுதிக்குள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.21) ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தபோது, ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர், அந்த படகை சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகில் இருந்த ஐந்து பேரை இந்தியக் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக மீனவர்கள் சென்னை வருகை: ராமேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்த்த 64 மீனவர்கள், கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 64 மீனவர்களை கைது செய்தனா். பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து 63 தமிழக மீனவர்களை கடந்த நவம்பர் 9ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
பின்னர், மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், 63 மீனவர்களுக்கும் அவசர காலச் சான்று வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 15 மீனவர்கள் கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தடைந்தனர். மீதமுள்ள மீனவர்களை நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.23, 24) சென்னை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை வந்தடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். இதில் முருகன் என்பவர் மட்டும் இரண்டு முறை கடல் தாண்டி மீன் பிடித்ததால், 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்படுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க: நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் படகு.. கோவையில் உள்ள தனியார் நிறுவனம் அசத்தல்!