இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊரணியில் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
இந்தாண்டு கோவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக மீன் பிடி திருவிழா கொண்டாட்டத்தில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், இதற்கு தீர்வைக் காணும் வகையில் ஒன்றுக் கூடிய கிராமத்தினர் 25 பேர் மட்டும் குளத்தில் இறங்கி மீன் பிடி திருவிழா கொண்டாட அனுமதி கோர முடிவெடுத்தனர்.
இதனையடுத்து, பேரையூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அனுமதி கடிதமொன்றையும் வழங்கினர். அதில், 25 பேர் மட்டும் குளத்தில் இறங்கி மீன் பிடி திருவிழா கொண்டாடி கொள்கிறோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மீன்பிடித் திருவிழா நடத்திக்கொள்ள அனுமதியை வழங்கியது.
அதன்படி, இன்று (ஜூலை25) மேட்டுப்பட்டி கிராம குளத்திற்குள் 25 பேர் மட்டும் இறங்கி மீன் பிடியில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி தலைமையில் 20 காவல்துறையினரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற நிகழ்வில் மீன் வலைகள் கொண்டு சுமார் 300 கிலோ எடையளவு கொண்ட கெண்டை, குறவை, விரால் உள்ளிட்ட மீன்கள் பிடித்து மகிழ்ந்தனர்.