ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாம்பன் பாலத்தை மாற்றி, ரூ. 250 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்துக்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டு வரும் தூண் அமைக்கும் பணியில் 3 முத்துக்குளிக்கும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்பிக் நகரைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர் சகாயம் (53), நடுக்கடலில் கட்டுமானப் பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின் உயிரிழந்த மீனவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாம்பன் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.