தமிழர்களின் கிராமியக் கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகுழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்களை வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5000 வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 வீதம் 100 குழுக்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கு தனிப்பட்ட கலைஞர் ஒருவர் மார்ச் 31ஆம் தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கலைக் குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பங்களை இலவசமாக பெற தபால் மூலம் கலைஞர்கள் மற்றும் கலை குழுக்களின் சுய முகவரி, பத்து ரூபாய் தபால் தலையை ஒட்டி மன்றத்துக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31 பொன்னி பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600028 என்ற விலாசத்திற்கு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த ஜூலை 31ஆம் தேதி மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.