தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கும், பாசனத்திற்காகவும் நவம்பர் 30ஆம் தேதி மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரை 1093 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (டிச.3) ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. தொடர்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது, இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவார், ராமநாதபுரம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன், பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மதகு அணையில் இருந்து மலர்தூவி ராமநாதபுரம் மாவட்ட பெரிய கண்மாய்க்கு தண்ணீரை வழியனுப்பி வைத்தனர். வைகை ஆற்றில் அளவுக்கு அதிகமாக நாணல்கள், கருவேல மரங்கள் இருப்பதால் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையாக வைகை தண்ணீரை பெற முடியவில்லை.
ஆதலால், விரைவாக வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி வைகை தண்ணீரை முழுமையாக பெறுவதற்கு பொதுப்பணித் துறை அலுவலர்களும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கூடுதலாக நீரைத் திறந்து விடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.