ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் காசிபாளையத்தில் உரிய மருத்துவ அனுமதியின்றி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் யசோதா பிரியாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததுள்ளது.
இதன்பேரில் சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நாகராஜின் கிளினிக்கை சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி சில மாத்திரைகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவர், பட்டபடிப்பு எதுவும் படிக்காமல், மருத்துவ சான்றும் இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி மருத்துவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கிளினிக்கை சோதனை செய்த அலுவலர்கள், அங்கிருந்த மருந்துகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மருத்துவர் யசோதா பிரியா கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் கடத்தூர் காவல் துறையினர் நாகராஜைக் கைது செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட நாகராஜனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நாகராஜ் நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளராக அவர் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அவர், கடந்த 2012ஆம் ஆண்டு இதே வழக்கில் கைதாகி சிறை சென்றதும், 2015ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அதிக விலைக்கு காய்கறி தொகுப்பு விற்றால் புகார் தெரிவிக்கலாம் -ஆட்சியர் அறிவிப்பு!